Pages

Sunday, November 1, 2015

SYMA Medical Centre ~ continuing good service for 25 years now


SYMA Medical Centre turns 25 … and an article by Yours Truly on the medical Centre written for the SYMA Medical Service - Silver Jubilee Souvenir

சென்னை மாநகரம் தற்போது தேசத்தின் மருத்துவதலைநகரம் ஆக விளங்குகிறது. இங்கே பல பிரசித்தி பெற்ற மருத்துவமனைகள் உள்ளன.  தெய்வீகம்  கமழும் திருவல்லிக்கேணி திவ்யதேசத்தில்,  தேசபக்தி, கல்வி, உயர்பண்புகள் நிறைந்த புனிதமண்ணில் -  சைமா 25 ஆண்டுகளாக மருத்துவப்பணி ஆற்றி வருகிறது. 
 A view of Medical centre taken in 2001 & one taken recently (below)

சங்க இலக்கியங்களில் குறிஞ்சிப்பாட்டில் பல்வேறு மருத்துவக்குணங்களைக் கொண்ட மரம், செடிகொடிகளின் குறிப்பு உள்ளது.  சிறுபஞ்சமூலம் எனும் ஐந்து சிறிய வேர்கள் உடல்நலம் பேண உதவுவதுபோல,  சிறுபஞ்சமூலப்பாடல்களில் உயிர்நலம் பேணும் அற்புத குறிப்புகள் உள்ளன.  சைமா தனது பல்வேறு சமுதாயப்பணிகளில் மருத்துவப்பணிக்கும் கல்விப்பணிக்கும் தலையாய முக்கியத்துவம் அளித்து வருகிறது.  ஆழ்வார்களின் காலத்தில் துளசிவனமாக திகழ்ந்த  ப்ருந்தாரண்யஸ்தலத்தில், இன்று பெரியபெரிய கட்டிடங்கள்,  பிளாட்கள் பெருகி உள்ளன. பணவசதி குறைந்தமக்கள் பலரும் உள்ளனர்.  இவ்விடத்தில் உள்ள ஏழைமக்களுக்கு தரமான  மருத்துவவசதி தரவேண்டும் என்றநோக்குடன் நமது மையம் செயல்பட்டு வருகிறது. சிறியஅளவில் ஆரம்பித்த இம்முயற்சி, பலரது உதவியினால், இன்று அழகான கட்டிடத்தில் நடைபோடுகிறது. 

நோயைப் போக்குவதற்கு மருந்துமட்டும் போதாது.  செந்நாப்போதாரின் வாக்கில் :
"உற்றவன் தீர்ப்பான் மருந்து உழைச்செல்வானென்று
அப்பால் நாற்கூற்றே மருந்து" -
நோயாளி,   மருத்துவர்,  மருந்து, அருகிருந்து துணைபுரிபவர் என நான்கு வகைகளை திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்.

நம்மையத்தில் நோய்க்கு பயன்பெறவருவோர் – மிகுந்த மரியாதையுடனும், பண்புடனும், சேவைநோக்குடனும் கவனிக்கப் பெறுகின்றனர். இலவசமாக தரப்படும் சேவையைவிட – பயனாளிகள் அச்சேவையை மதித்தல் வேண்டும் என்ற எண்ணத்துடன், இம்மருத்துவமையம் ஆரம்பித்தநாள் முதல் இரண்டு ரூபாய் மட்டுமே கட்டணம்; எனவே - 'ரெண்டுரூவாஆஸ்பத்திரி' – என பொதுமக்கள் இடையே நமது மையம் பிரபலம்.

25 ஆண்டுகள் என்பது சற்றே நீண்டகாலகட்டம் – இவ்வளவு ஆண்டுகளாக தொடர்ந்து நடத்துவதில், சங்கநிர்வாகிகள் பல இடர்பாடுகளை கடந்துள்ளனர். நமது பலகூட்டங்களில், இச்சேவையை மேலும்திறன்பட, பயனாளிகளுக்கு உதவுமாறு இயங்க அவ்வப்போது சிலமாற்றங்கள் செய்துவந்துள்ளோம்.  நமது மையத்துக்கு வருகைதரும் அனைத்து பயனாளிகளின் மருத்துவவிவரங்களையும் மருத்துவ அட்டையில் பதிவுசெய்து உள்ளோம்.  இந்த மருத்துவகுறிப்புகள், கவனிக்கும் மருத்துவர்களுக்கு பயனாளிகளின் கடந்த மருத்துவசரித்திரத்தை மனதில்கொண்டு, சரியான மருந்துமாற்றங்கள் செய்வதற்கு ஏதுவாக உள்ளது.  இந்த  விவரங்கள் கணினிபடுத்தப்பட்டும் உள்ளன.

நம் மையத்தில், பல்வேறுதுறையில் சிறந்துவிளங்கும் மருத்துவர்கள், தூயசேவை நோக்குடன் பணிஆற்றி உள்ளனர்.  ஒரே  மருத்துவரே பயணிகளை எப்போதும் கவனித்தால் - 'நோயாளிமருத்துவர் இடையே நல்லுறவு, புரிதல், நம்பிக்கை, மருத்துவக்கண்காணிப்பு' ஆகியவை சிறக்கும் என ஆலோசித்து,  அனைத்து நாட்களிலும் ஒரே மருத்துவரே – மருத்துவ ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்து உள்ளோம்.  உடல்நலம் விரைவில் பெற, மனநலமும், சூழ்நிலையும் முக்கியம்.  நமது மையத்தின் சுற்றுப்புறசூழ்நிலையை மேம்படுத்தி, ஒரு இனியநிலை அமைய ஏற்பாடு செய்து உள்ளோம்.  நோயாளி, மருத்துவர்அருகே தனியே அமர்ந்து, தங்கள் உடல்நிலையை நன்குகூறி, மருத்துவ அறிவுரை பெறுமாறு அமைத்துள்ளோம்.     நமதுமையத்தில் எப்போதும், தரமான மருந்துகளைமட்டுமே  அளித்துவருகிறோம். மருந்துகளை கையாள்வது மிக கடினமானது. நமக்கு எப்போதுமே அமைந்துள்ள சேவைநோக்கும், ஈடுபாடும் கொண்ட தொண்டர்கள், இப்பணியை செவ்வனே செய்து வந்துஉள்ளனர்.  

தரமான மருந்துகளை, நல்ல நிறுவனங்களிடம் இருந்து வாங்கி, விநியோகித்து வந்தோம். 
எனினும் இலவசமாக தரப்படுவதால் – தரம் சற்று குறையக்கூடுமோ' என ஐயப்பாடு வரலாகாது என நாம் இரண்டு மருந்துகடைகளுடன் முன்னேற்பாடு செய்துகொண்டு - இப்போது, மருந்துகளை பயனாளிகள் நன்கறிந்த கடைகளில் பெற ஏற்பாடு செய்துஉள்ளோம்.  இன்றைய காலகட்டத்தில், சிலநூறுகள் ஆகும் மருந்துகள், அதேகடையில், தங்களுக்கு இலவசமாக அளிக்கப்படுவது, பயணிகளுக்கு, மேலும் நம்பிக்கையை கூட்டி, அவர்களிடையே, நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. 

2007ம் ஆண்டு, 'திருமதி சுகந்தவல்லி - திரு PV  ராமஐயங்கார் ' நினைவாக – இரத்த பரிசோதனை நிலையத்தை துவக்கினோம்.  இது காலைவேளைகளில் நமது சங்க கட்டிடத்திலேயே  இயங்குகிறது. இங்கே மிககுறைவான கட்டணத்தில் பல்வேறு இரத்தபரிசோதனைகள் செய்துவருகிறோம்.

எந்த எதிர்பார்ப்பும் இன்றி, சமுதாயத்துக்காக பணிசெய்யும், சைமாவினரை – பொதுமக்கள் மனதார வாழ்த்தும்போது – மனநிறைவும்;  நம் மருத்துவமையமும் நமது ஏனைய பணிகளும், மேலும் விரிவுபெற்று, இன்னமும் பெரிய கட்டிடத்தில், மேலும் மெருகேறி செயல்படவேணும் என திண்ணமான குறிக்கோளுடன் முன்னேறுகிறோம்.

நமது மருத்துவமையத்தின் தோற்றம், வளர்ச்சி, செயல்பாடு பற்றி இம்மலரில் விரிவான கட்டுரைகள் இடம்பெற்று உள்ளன. இம்மலர்  நமதுவளர்ச்சியையும் செயல்பாட்டையும் கொண்டாடமட்டுமமே  அல்ல.  பலனை எதிர்பாராது பெய்யும் வான்மழைபோல நம் சங்கத்தின் பணிகள் மென்மேலும் பல்ஆண்டுகள் தொடர்ந்து மலர,  நாம் ஈடுபடுத்திக்கொண்டு – இந்நிலையை அடைய - நம்மைஊக்குவித்து, செயல்திட்டங்கள் அளித்து, சரியானபாதையில் வழிகாட்டி, பணஉதவி, பொருள்உதவி, அளித்து உதவிவரும் அனைத்து நல்உள்ளங்களுக்கும், இடைவிடாது பணிசெய்துவரும் நம்தோழர்களுக்கும், நமதுமுன்னாள் தலைவர்கள், செயல்வீரர்கள் அனைவருக்கும் - நன்றிநவின்று – இப்பணியில் நம்மை மறுபடி ஈடுபடுத்திக்கொள்கிறோம். நன்றி, வாருங்கள், எங்களுடன்இணையுங்கள்; ஒன்றுகூடி, நாம் வாழும் இன்னலுகலத்தை மேலும் இனிய இடமாகஆக்குவோம்.

அன்புடன் ஸ்ரீ. சம்பத்குமார் – (செயலாளர்.)

Me speaking with Dr K Sridhar, Dr J Radhakrishnan, Secretary – Health, Govt of Tamilnadu
and SYMA President on stage


This article written by me – as appeared in ‘Silver Jubilee Souvenir’ – SYMA 25 years of Medical Service – released by Dr J Radhakrishnan at Terapanth Bhavan on 2nd Oct 2015.

No comments:

Post a Comment