Pages

Sunday, August 1, 2021

Aadi Velli - worshipping Nagar

  

செல்லாத்தா செல்ல மாரியாத்தா

எங்கள் சிந்தையில் வந்து அரை வினாடி நில்லாத்தா !

கண்ணாத்தா உன்னைக் காணாட்டா

இந்த கண்களிருந்து என்ன புண்ணியம் சொல்லாத்தா !!

 

~ இன்று (23.7.2021) ஆடி வெள்ளிக்கிழமை.  பட்டிதொட்டிகள்தோறும் கம்பீரமாக ஒலிக்கும் இந்த பாடல் இன்று கேட்கவில்லை. கொரோனா கொடுமை வேறு தலைவிரித்தாடி, இப்போது குறைந்தாற்போல் உள்ளது.  மக்கள் அனைத்தையுமே மறந்து விட்டனர் போல !  .. தெருக்களில் மறுபடி கூட்டம், மாஸ்க்குகள் கழுத்தை சுற்றி - மூக்கை வாயை மூடி அல்ல !!  அரசாங்க ஆணையின் படி தெருவோரக்கோவில்களிலே மைக்செட் தடையாம் !! மக்கள் சிலர் கூற்று .. .. கேரளாவில் கொரோனா விடுமுறை !!  .. ஆனால் கன்வர் யாத்திரைக்கு உச்ச நீதி மன்றம் தடை !! இந்துக்களின் வழிபாட்டு முறை ஒவ்வொன்றுக்கும் ஓர் பெயரில் தடை !  என் சொல்ல !!!



திருவல்லிக்கேணியில் இந்நன்னாளில் பக்தர்கள் - முக்கியமாக பெண்கள், பக்தியுடன் அம்மன் கோவில்களுக்கும்,  வெங்கட்ரங்கம் தெருவில் உள்ள - பார்த்தசாரதி சபா என்றழைக்கப்படும் இடத்திற்கும் சென்று, புற்றுக்கு பால் வார்த்து வழிபடுவர்.

ஆடிமாதம் என்பது அம்மன் கோவில்களுக்கு மிக உகந்தமாதம் ஆகும். இந்த மாதத்தில் அனைத்து அம்மன் கோவில்களிலும் தீமிதி திருவிழா, தேர்திருவிழா, என அனைத்து திருவிழாக்களும் நடைபெறும், குறிப்பாக இந்த மாதத்தில் உள்ள ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகளும், அபிஷேக ஆராதனைகளும் நடைபெறுவது வழக்கம்.  ஆடி வெள்ளிக்கிழமை  நாட்களில்  பக்தர்கள் 'புற்றுக்கு பால் தெளித்தல்' எனும் வழிபாட்டு முறையில் - . நாகர்களுக்கு பால் இட்டு வழிபடும் சிறப்பு நாள். 

ஆடி மாதத்தில் வரும் ஒவ்வொரு வெள்ளி கிழமையும் பக்தர்கள்  புற்றுள்ள அம்மன் கோயிலுக்குச் சென்று நாகருக்குப் பால் வார்த்து, குலம் தழைக்க வேண்டி வழிபடுவர். ஆடி முதல் வெள்ளியன்று இனிப்பு தேங்காய் கொழுக்கட்டை, உப்பு, எள்ளுக் கொழுக்கட்டை ஆகியவற்றை செய்து அம்மனுக்கு படையலிட்டு வழிபட்டு மகிழ்வது தமிழக மக்களின் வழக்கம்.  அதேபோல, ஆடி வெள்ளியன்று மாலை நேரத்தில் அம்மனை அலங்கரித்து வழிபட்டால் வளங்கள் அனைத்தும் வந்து சேரும். குடும்பம் முன்னேற்றம் அடையும், மாங்கல்ய பாக்கியமும், தொழில் மேன்மையும் ஏற்படும். ஆடி வெள்ளியன்று குத்துவிளக்கு பூஜை செய்து சுமங்கலிப் பெண்களுக்கு மங்கலதுணி, தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு, மஞ்சள் மற்றும் குங்குமம் வைத்துக் கொடுத்தால் நற்பலன்கள் நம்மை வந்து சேரும், இல்லத்தில் மங்கலம் உண்டாகும் என்பது ஐதீகம்.



இவற்றில் நாகர் வழிபாடு பல்லாண்டுகளாக தொடர்ந்து பெண்களால் வழிபாட்டு வரும் முறை.  இன்றும் தென் மாவட்டங்களான கன்யாகுமரியிலும் நாகர்கோயிலிலும் - இது சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது.     நாகம் பூமிக்குள் இருந்து வந்து அங்கேயே சென்று மறைந்து விடுவதால் மக்கள் தம் மூதாதையரும் அங்கிருந்து வந்து அங்கேயே சென்று விட்டனர் என்று காரண, காரிய இயைபுடன் நம்பி வந்தனர். தொன்மம் என்பது ஆதிமனிதனின் அறிவியல் தேடல் என்பர் தொன்மவியல் அறிஞர். மண், மலை, கடல் போன்ற இயற்கை கூறுகளில் இருந்து தோன்றி திரும்பவும் அவற்றுக்குள்போய் மறைவதைக் கண்ட மனிதன் சூரியன், சந்திரன், பாம்பு ஆகியவற்றை வழிபடத் தொடங்கினான்.  நாகர் வழிபாடு   உலகின் அனைத்துப் பக்திகளிலும்  தனிச் செல்வாக்கு பெற்றிருந்தது.  

நாகங்கள் கறையான் கட்டும் புற்றுக்களில்போய் குடிகொள்ளும் என்பது ஆழ்ந்த நம்பிக்கை.  நாகப்பாம்புகள் பால் உண்ணாது எனினும், அவற்றிற்கு பால் வார்த்தல் ஒரு நம்பிக்கை சார்ந்த பக்தி..   புற்றை சுற்றி வருவோருக்கு நோய் தீர்கிறது; மனம் தெளிவடைகிறது;  பாம்பு என்பது ஆதியில் இருந்தே வளமைக் குறியீடாகவே உணரப்பட்டது.  நாகத்தைக் கிறிஸ்துவ இஸ்லாமிய சமயங்கள் சாத்தான்/ சைத்தான் என்று சொல்லி அதன் வழிபாட்டுத் தகுதியைப் போக்கி விட்டன. விலக்கப்பட்ட கனியை உண்ணும்படி ஏவாளை தூண்டியது ஒருபாம்பு. இந்த பாம்பை சைத்தானின் உருவமாகக் கருதுகின்றனர்.  பவுத்த மதத்தில் நாகர் வழிபாடு பிரசித்தி பெற்றது. இலங்கையிலும் ஜாவா தீவிலும் நாக பூஷணி என்ற பெண் தெய்வம் பவுத்த மரபின் செல்வாக்கு படைத்த தெய்வம் ஆகும்.  

இன்று பௌர்ணமி திதி - சந்திர மாசம் ஆரம்பம் -   பாதாள லோகத்தை பற்றிய விரிவான விளக்கங்கள் - விஷ்ணு புராணத்தில் - அழகாக விவரித்து இருக்கிறார்கள்.  நாம் அனுதினமும் வணங்கும் திருமாலின் படுக்கையும் அனந்தன் எனப்படும் ஆதிசேஷன் நாகங்களின் தலைவன்.  

முன்னர் 'பார்த்தசாரதி சபா' என்று குறிப்பிட்ட இடம் - சில தொழிற்சாலைகளுடன் பல்லாண்டுகளாக  இருந்து வந்தது.  எவர்சில்வர் குடங்கள், லேத்து பட்டறைகள், வார்ப்பகங்கள், சாயத்தொழிற்சாலை, வண்டிகள் பழுது பார்த்தல் என பல்வேறு கடைகளின் இடையே கடைசியில் ஒரு பெரிய இடத்தில - நூற்றாண்டு பெருமை பெற்ற 'ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்வாமி சபா' சிறப்புற இருந்தது.  கர்நாடக இசை, பரதக்கலை, நாடகக்கலை இவற்றை பெருமளவில் உயர்த்தியது இந்த சபா.  முன்னொரு காலத்தில், சபா உறுப்பினர்  என்பதுவே ஒரு கெளரவம்.  திருவல்லிக்கேணி பணக்காரர்கள் அழகாக உடை, நகைகள் அணிந்து,  சபா நிகழ்சிகளுக்கு  வருவார்கள்.  சபா இருந்த இடத்தில் 'விஜய் அவென்யு' எனும் அடுக்குமாடி கட்டம் 1995ல் வந்தது.  சபா மற்றும் கடைகள் உள்ளடக்கிய இடங்கள் யாவையுமே டிகேகேஎன்என் வைஸ்யா சாரிட்டிஸ்க்கு சொந்தமானவை.  இப்போது இவ்விடத்தில் 'வாசவி பார்த்தாஸ்' எனும் அடுக்குமாடி குடியிருப்புகள் அழகுற அமைந்துள்ளன. 

இவ்விடத்தில்  [வாசவி பார்த்தாஸ் குடியிருப்பு பகுதி உள்ளே]  நெடிய அரசமரம் / வேப்ப  மரங்களும் - நாகப்ரதிஷ்டையும் உள்ளன.  பற்பல ஆண்டுகளாக பக்தர்கள் இவ்விடத்தில் வழிபட்டு வருகின்றனர்.  இந்த ஆடி வெள்ளி அன்றும் திரளான பக்தர்கள் - இவ்விடத்தில் வழிபட்டனர்.   அரசமரமும், நாகர்களும் - சில புகைப்படங்கள் இங்கே. [மத்திய வேளையில் மக்கள் இல்லாதபோது எடுத்தவை ]

அன்புடன் - ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்
23rd July 2021. 









2 comments:

  1. It was electrifying, energy charged during Aadi veli time. We, Hindus, found a way to celebrate every month, connect with entire community for the greater good. Inclusiveness and festivities lift up the spirits of everyone - food was free served. Everyone had a favorite God to hold onto, and all were respected. I guess, post-covod Era, we can forget those times. India is becoming more urban, intolerant, exclusive islands. Only hope is to truly be respectful of each other culture, beliefs.

    ReplyDelete