Hindu Munnani
protests TN Govt scheme to melt Temple Gold ..
புனிதமான தமிழகத்திலே
பல்லாயிரக்கணக்கான திருக்கோவில்கள் உள்ளன. ஹிந்து பக்தர்கள் பல நூற்றாண்டுகளாக திருக்கோவில்களுக்கு
பல்வேறு விதமான நன்கொடைகளை அளித்து பராமரித்து வருகின்றனர். தெய்வ நம்பிக்கை
கொண்ட ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்ட, தினமும் திருக்கோவில்களுக்கு செல்லும் ஒவ்வொருக்கும்
எம்பெருமானுக்கு எப்படி கைங்கர்யம் செய்ய வேண்டும், திருக்கோவில்களில் என்னென்ன செய்யவேண்டும்
என்பன நன்கு தெரியும்.
பால், தயிர், தேன் முதலிய திரவியங்களால் திருமஞ்சனம் செய்து, பெருமாளுக்கு
பட்டாடைகள் அணிவித்து, இறைவனுக்கு பாமாலைகள் பாடி, அற்புத மணமுடைய அருமையான
அழகு பூக்களை செவ்வனே கோர்த்து அழகிய பூமாலைகள் சாற்றி, தங்கம், வெள்ளி,
வைர வைடூரிய ஆபரணங்கள் செய்து சாற்றி, பலவித அன்னங்கள் செய்து,
திருவமுது செய்வித்து, பெரிய கோவில்கள் கட்டி, அவற்றை பராமரிக்க நிலங்களையும், வீடுகளையும்
திருக்கோவிலுக்கு கிரயம் பண்ணி .. .. என பற்பல, மன்னர்கள் முதல் சாதாரண
பிரஜைகள் வரை அவர்தம் சக்தியையும் மீறி செய்து வந்துள்ளனர்.
தமிழகத்தில் ஹிந்து கோவில்கள்
மட்டும் அரசாங்க கட்டுப்பாட்டில் உள்ளன. ஏனைய மதத்தினரின் வழிபாட்டு தலங்களை அவர்களே
நிர்வாகம் செய்து வருகின்றனர். திருக்கோவில்களுக்கு பக்தர்கள் தரும் காணிக்கைகள்,
சில சமயங்களில் - திருக்கோவில் சம்பந்தப்படாத விஷயங்களுக்கும் உபயோகப்படுத்தப்படுகின்றன.
அதே சமயம் நிறைய திருக்கோவில்கள், சரியாக பராமரிக்கப்படாமல், நித்ய பூஜைகள் கூட சரிவர
நடக்கும் நிலைமை இல்லாமை உள்ளது மிகுந்த வருத்தம் தரும் ஒரு விஷயம்.
சமீப கொரோனா காலத்தில்
- திருக்கோவில்களுக்கு மூன்று நாட்கள் வாராந்திர விடுமுறை என திருக்கோயில்களை சாற்றி
- முக்கிய பண்டிகை நாட்களில் கூட தம் இறைவனை வழிபட முடியாமல் ஹிந்து பக்தர்கள்
மனம் வருந்தினர்.
இத்தகைய இழி நிலைமையில்,
கோயில்களில் பயன்பாட்டில் இல்லாத நகைகளை மத்திய அரசின் உருக்காலையில் உருக்கி தங்க
பிஸ்கட்டுகளாக மாற்றி, வைப்பு நிதியாக வைக்கப்பட்டு, அதன் மூலம் கிடைக்கும் வட்டித்
தொகையில் கோவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும் என இந்து சமய அறநிலையத்துறை
அமைச்சர் கூறியது பக்தர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. திருக்கோவில்களுக்கு
பக்தர்கள் அளித்த நகைகள், பொருட்கள், காட்சி பொருள்களாக ஆகிவிடுமோ ! - திருக்கோவில்களுக்கு
உபயோகம் இல்லாது போய் விடுமோ ! - முறைகேடுகள் நடந்தேறுமோ ! என பக்தர்களின்
மனதில் அச்சம்.
கோயிலுக்குச் சொந்தமான சொத்துக்களை
மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து முன்னணி போராடி வருகிறது.
கோயில்களில் உள்ள தங்கம், வெள்ளி, விலை உயா்ந்த கற்கள் குறித்து இந்துசமய அறநிலையத்
துறை வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்; கோயில் தங்கத்தை உருக்கும் திட்டத்தை கைவிட
வேண்டும் - இறைவனுக்கு பக்தர்கள் காணிக்கையாக அளித்த நகைகள் - இறைவனுக்கே மட்டுமே,
வேறு எந்த காரியத்துக்கும் அவற்றை உபயோகப்படுத்தக்கூடாது - இந்த நகைகள் உருக்கும் திட்டத்தை
கைவிட வேண்டும் என வலியுறுத்தி, இந்து முன்னணி திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி எம்பெருமானை
வணங்கி, அவரிடமே முறையிட்டு, அறப்போராட்டத்தை இன்று திருவல்லிக்கேணியில் நடத்தியது.
16th Oct 2021.
அற போராட்டம் வெற்றியடைய பெருமாள் கிருபை கிட்ட பிரார்த்தனை செய்வோம்...
ReplyDelete