இன்றைய படம் ஒரு கொக்கு - உடனே மனதில் கொக்கு சைவ கொக்கு என சினிமா பாடலை முணுமுணுக்க வேண்டாம் ! - "கொக்கு பறக்குதடி பாப்பா,
வெள்ளைக் கொக்கு பறக்குதடி"- என்ற பாடல் தெரியுமா ! இதுகாறும் கேட்டுள்ளீர்களா
?? எனக்கு தெரியாது ! ஆனால் இவை போன்றவையே நாம் சரித்திர புத்தகங்களில் படித்து
இருக்க வேண்டும் - ஏனெனில் இதை பாடியவர்,
52 வயதில் 29 முறை நம் தேசத்திற்காக சிறை சென்றவர்.
நம் நாடு சுதந்திரம் பெற தங்களை முழுமையாக அர்ப்பணித்த தியாகிகளில் குறிப்பிடத் தக்கவர் அமரகவி தியாகி விஸ்வநாததாஸ். தன்னுடைய சிந்தனை, சொல், செயல் அனைத்துமே நாட்டின் நலனுக்கு என வாழ்ந்தவர். சங்கரதாஸ் சுவாமிகளால், “நாடக உலகின் இமயமலை“ என்றும் சிறப்பிக்க பட்டவர்.
ஒருசமயம் நெல்லை சீமையிலே - வள்ளி திருமண நாடகத்தில் 'கொக்கு பறக்குதடி பாப்பா' பாடலைப் பாடுகிறார் விஸ்வநாததாஸ். உடனே மேடைக்கு வந்த போலீஸ் ஆங்கில அரசுக்கு எதிராகப் பாடியதால் உங்களைக் கைது செய்கிறோம் எனக் கூறினார்கள். யாருக்கு வாரண்ட் எனக் கேட்க விஸ்வநாததாசுக்கு என காவலர்கள் பதிலளித்தனர். இந்தப் பாடலைப் பாடியது நான் இல்லை; முருகப் பெருமான் வேடன் ரூபத்தில் வந்து பாடினார், எனவே முருகப்பெருமான் பேரில் வாரண்ட் கொண்டு வாருங்கள் என்று விஸ்வநாததாஸ் கூறினாராம்.
பட்டாசு சிவகாசி ஊரில், ஜூன் 16, 1886 ஆம் ஆண்டு சுப்ரமணியம் - ஞானாம்பாள் தம்பதிக்கு மூத்த மகனாக பிறந்தார். குரல் வளமும், கலை ஆர்வமும் கொண்டிருந்ததால், மேடை நாடகத்தின்பால் ஈர்க்கப்பட்டார். ஆரம்ப காலங்களில் புராண நாடகங்களில் பக்திப்பாடல்களை மட்டுமே பாடி வந்த இவர் தூத்துக்குடியில் காந்தியடிகளைச் சந்தித்த பின்னர் காங்கிரஸ் இயக்கத்தில் இணைந்தார். தெய்வ பக்தியோடு தேசபக்தியும் ஓங்கும் பாடல்களை பாடினார்.
"கதர் கப்பல் தோணுதே', "கரும்புத்தோட்டத்தில் போலீஸ் புலிக்கூட்டம், நம் மீது போட்டு வருது கண்ணோட்டம்” என்பனவும் இவர் மேடையில் பாடிய தேசப்பற்றுப் பாடல்கள். "வெள்ளைக்கொக்கு பறக்குதடி பாப்பா.... அதை கோபமின்றி கூப்பிடடி பாப்பா என்ற பாடல் வரிகள் தியாகி விசுவநாததாசை என்றும் நினைவு படுத்துபவை. அவரது பாடல்கள், காங்கிரஸ் கட்சியின் விடுதலை போராட்டங்களில் பரவலாக பயன்படுத்தப்பட்டன. ஜாலியன் வாலாபாக் சம்பவத்தையடுத்து அவர் எழுதிய, ‘பஞ்சாப் படுகொலை பாரில் கொடியது’ என்ற பாடல் விடுதலை போராட்டத்தில் முக்கிய இடம் பிடித்தது. புராண நாடகங்களின் வாயிலாக விடுதலை அரசியலை புகுத்தியது இவரது சிறப்பம்சம் என்று ஆய்வாளர்களால் பாராட்டப்படுகிறது.
''கொக்கு பறக்குதடி பாப்பா – நீயும் கோபமின்றிக் கூப்பிடடி பாப்பா!! கொக்கென்றால் கொக்கு கொக்கு –அது நம்மைகொல்ல வந்த கொக்கு வர்த்தகம் செய்ய வந்த கொக்கு -நமது வாழ்க்கையைக் கெடுக்க வந்த கொக்கு! அக்கரைச் சீமைவிட்டு வந்து - இங்கே கொள்ளை அடிக்குதடி பாப்பா!" கொக்கு அந்த வெள்ளை கொக்கு” என்று பாடியவுடன் எழுந்த மக்களின் கைதட்டல்களால் அரங்கம் அதிரும், கோஷங்கள் முழங்கும். பிரிட்டிஷ் அதிகாரிகள் வெறுப்படைந்தனர். பாடல்கள், காவல்துறையின் நெஞ்சைத் துளைத்தது. விஸ்வநாததாஸ் மேடைகளில் தொடர்ந்து ராஜத் துரோக பாடலைப் பாடி வருகிறார். அவ்வாறு பாடுவதை அவர் நிறுத்த வேண்டும், இனி விஸ்வநாததாஸ் ஆங்கிலேயரைத் தாக்கியோ அல்லது இந்திய விடுதலை பற்றியோ மேடைகளில் பாடக் கூடாது என தடையாணை பிறப்பித்தது ஆங்கிலேய அரசு.
எதற்கும் அஞ்சாமல், “போலீஸ் புலிக்கூட்டம் நம்மேல் போட்டு வருகிறது கண்ணோட்டம்” என்று பாடி ஆங்கில அரசை அதிர வைத்தார். இதனால் விஸ்வநாததாஸ் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். அவர் சிறையில் இருக்கும்பொழுது அவரின் மூத்த மகன் சுப்பிரமணிய தாஸ் மேடைகளில் தேசபக்திப் பாடல்களைத் தொடர்ந்து பாடினார். மகனையும் கைது செய்தனர். அப்பொழுதுதான் திருமணமாகியிருந்த சுப்பிரமணியதாஸிடம், “இனிமேல் தேச விடுதலை பற்றி எந்த மேடையிலும் பேச மாட்டேன், பாட மாட்டேன் என்று எழுதிக் கொடுத்தால் உன்னை விடுதலை செய்கிறோம்'' என்றனர் ஆங்கில அதிகாரிகள். தனது தந்தையிடம் இது பற்றிக் கருத்து கேட்டபோது கோபத்தோடு வெடித்த விஸ்வநாததாஸ், “மகனே! நீ மன்னிப்புக் கேட்டு மானமிழந்து மனைவியுடன் வாழ்வதைவிட சிறையிலேயே மாவீரனாகச் செத்துவிடு” என்று கடிதம் அனுப்பினார்.
இவரின் நாடகங்களுக்கு அரசு விதித்த தடையை மீறி சிறைத் தண்டனைப் பெற்றவர். ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்துகொண்டு சிறைவாசம் சென்றவர். இவர் திருமங்கலம் வட்ட காங்கிரஸ் கமிட்டியிலும், மதுரை ஜில்லா போர்டிலும், காங்கிரஸின் சார்பில் உறுப்பினராக இருந்தவர். வேடம் தரிப்பதற்கான உடைகளையும், கதர்த் துணியிலேயே தயாரித்து அணிந்து நடந்தவர்.
1940 ஆம் ஆண்டு திசம்பர் 31, 54ஆவது வயதில், வள்ளி திருமண நாடகத்தில், முருகனாக நடித்தார். மயில் மேல் அமர்ந்து கொண்டு, "கொக்கு பறக்குதடி பாப்பா, வெள்ளைக் கொக்கு பறக்குதடி" என்று பாடினார். அவர் பாடலைத் தணிக்கை செய்யவும், அவர் பாட தடை விதிக்கவும், ஆங்கிலேய போலீஸ் அதிகாரிகள் காத்திருந்தார்கள். நாடகம் முடியட்டும், அவரைக் கைது செய்யலாம் என்றிருந்தார்கள். முருகன் வேடமிட்ட தாஸ், ஆவேசமாக, அரக்கர்களை ஏசுவதைப் போல, ஆங்கிலேயர்களை வசை பாட ஆரம்பித்தார். கூட்டம் ஆர்ப்பரித்தது. அய்யகோ முருகன் அப்படியே மயில் மேல் சிலையாக இருந்தார். ஆம்! மயில் மேல் அமர்ந்து தேசபக்தி பாடல்களைப் பாடிக்கொண்டிருக்கும்பொழுதே அவரின் உயிர் பிரிந்தது. . "என் உயிர் நாடக மேடையிலேயே போக வேண்டும்" என்ற அவரது விருப்பத்தைக் கடவுள் நிறைவேற்றி வைத்து விட்டார்.நமது தேச சுதந்திரம் எண்ணற்ற தியாகிகளின் உயிர் பலியாலும், ஆங்கிலேயரின் அடக்கு முறையில் பிளந்த மண்டைகள் - கொட்டிய ரத்தங்களாலும், போராட்டங்களாலும் - மக்கள் எழுச்சியாலும், 1940களில் இரண்டாம் உலகப்போரின் பின்விளைவுகளாலும் - நாம் இதுகாறும் நினைத்தும் பார்த்திராத எண்ணற்றோரின் தியாகங்களும் கிடைத்தது. கத்தியின்றி, இரத்தமின்றி சும்மா கிடக்கவில்லை.
ஒவ்வொரு தேசமும் தனது பாரம்பரியத்திலும், தனது மாந்தோரின் வீர தீர
பராக்கிரமங்களிலும் பெருமை கொள்ளல் வேண்டும் - அதற்கு முதல்படி - அத்தகையோரை நினைவு
கூறுதல் .. .. இந்த கொக்கின் மூலம் அய்யா விஸ்வநாத தாஸ் அவர்களுக்கு என் அஞ்சலி, மரியாதைகள்,
சமர்ப்பிக்கின்றேன்.
15th Jan 2022.
No comments:
Post a Comment