Pages

Friday, March 18, 2022

Thiru Kapaleechwaram - கயிலையே மயிலை .. .. மயிலையே கயிலை !!

கயிலையே மயிலை .. .. மயிலையே கயிலை என சிறப்பு பெற்ற கபாலீச்வரம்  - இன்று பங்குனி உத்திர பெருவிழாவில் தீர்த்த திருவிழா - திருக்குளத்தில் நீரோட்டம்.  

சென்னை மாநகரம் தோன்றுவதற்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மயிலாப்பூர் ஒரு கடலோர நகரமாகப் பெயர் பெற்றிருந்தது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இங்கே வந்த கிரேக்க ஆசிரியர் தாலமி என்பவர் இவ்வூரை மல்லியார்பா எனக் குறிக்கிறார்.   பல்லவர் காலத்தில் இது ஒரு சிறப்புப் பெற்ற துறைமுகமாகவும் விளங்கியது. 16 ஆம் நூற்றாண்டில் இப்பகுதியில் போத்துக்கீசர் ஆதிக்கம் ஏற்பட்டபோது, இவ்விடத்தில் அவர்களுக்கான குடியேற்றம் ஒன்றை நிறுவ விரும்பினார்கள். இதனால், மயிலாப்பூர் நகரத்தைக் கடற்கரையிலிருந்து உள் நோக்கி இன்றைய இடத்துக்கு நகர்த்தினார்கள்.  இப்போது நாம்  வழிபடும் திருக்கோவில் சில நூறறாண்டுகள் முன்பு கடலுக்கு அருகாமையில் இருந்தது .. பின்னர் இவ்விடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.   திருஞானசம்பந்தரின் தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம் இது.:  

மலிவிழா வீதி*   மடநல்லார் மாமயிலைக்

கலிவிழாக் கண்டான் *   கபாலீச் சரம்அமர்ந்தான்

பலிவிழாப் பாடல்செய் *   பங்குனி யுத்திரநாள்

ஒலிவிழாக் காணாதே*   போதியோ பூம்பாவாய். 

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில், ஏராளமான விழாக்களும் விசேஷங்களும் உண்டு - பங்குனி மாதத்தில் நடைபெறும் 10 நாள் உதவதில் - திருத்தேர்,  அறுபத்து மூவர் திருவிழா அமர்க்களப்படும்.  இன்று கபாலி குளத்தில் தீர்த்த திருவிழா - சக்ரஸ்னானம். 

அருள்மிகு கபாலீசுவரர் மேற்கு நோக்கிய சந்நதியில்  லிங்க வடிவில் அருள் பாலிக்கிறார்.    புன்னைவனத்து ஈசன் , வேத நகரினான், சுக்ரபுரியான், கபாலீச்சரத்தினான் என்றும் அழைக்கின்றனர்.  திருத்தொண்டர்களின் பெருமை, இறைவனை விடவும் பெரிது' என்று அந்தச் சிவப் பரம்பொருளுக்கே அன்னை உணர்த்திய அற்புதம் நிகழ்ந்த திருத்தலம் மயிலாப்பூர்.   

சுக்கிரன் பூஜித்ததால் சுக்கிரபுரி என்னும் பெயரும் பெற்ற திருத்தலம்.  திருஞானசம்பந்தப் பெருமான் எலும்பைப் பூம்பாவையாக்கிய புகழ்தலம். அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகிய வாயிலார் தோன்றிய தலம்.     திருமயிலையில் சிவநேசச் செட்டியார் என்னும் செல்வ வணிகர் வாழ்ந்து வந்தார். அவருடைய மகள் பெயர் பூம்பாவை. அவர் ஒரு நாள் பூக்கொய்யும்போது பூநாகம் கடித்து இறந்தாள். சிவநேசர் பூம்பாவையுடைய எலும்பையும் சாம்பலையும் திரட்டி ஒரு குடத்தில் அடைத்து அதனைக் கன்னிமாடத்தில் வைத்திருந்தார்.   அவருடைய வேண்டுகோளுக்கு இணங்கி சம்பந்தர் மயிலை வந்தார். எலும்புக் குடத்தைக் கபாலிப் பெருமான் முன்னிலையில் வைத்து திருவருளை நினைத்துப் பதிகம் பாடினார். பாடி முடித்தவுடன் பூம்பாவை. உயிர் பெற்றெழுந்தாள். பூம்பாவை சிவத்தியானத்திலிருந்து முக்தி அடைந்தார்.  

இன்று கபாலி குளத்தில் நடைபெற்ற தீர்த்தவாரி படங்கள் - சண்டிகேஸ்வரர், பிள்ளையார், முருகர், கபாலீஸ்வரர், கற்பகாம்பாள் என ஐந்து தெய்வங்கள் எழுந்து அருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். 

அடியேன் ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்
திருவல்லிக்கேணி
18.3.2022




















1 comment: