Pages

Saturday, June 4, 2022

Avvaiyar and Athiyaman - அமிழ்து விளை தீம் கனி ஔவைக்கு ஈந்த !!

சென்னையில் மக்கள் குவியுமிடம் மெரினா கடற்கரை .. .. .. பல சிலைகள் உள்ளன.  இராணி மேரிக்கல்லூரி எதிரில் 'நம்ம சென்னை' எனும் ஸெல்ப்பீ பாயிண்ட் இளைஞர்களை கவர்கிறது .. .. ..அதற்கு அருகாமையில் இருக்கும் ஒவ்வையார் சிலையையும் கவனித்து இருப்பீர் !! 



அவ்வை-யார் ?    -  ஔவை என்றால் மனதில் தோன்றுவது !  பாடப் புத்தகங்களில் பார்த்த 'கையில் கோலூன்றி நெற்றியில் நீரு அணிந்து கம்பீரக் குரலில் பாடும் அறிவான ஒரு மூதாட்டியின் உருவம்' !!  ‘பழம் நீ அப்பா ஞானப் பழம் நீ அப்பா’ என்று சினிமாவில் பாடிய உருவம் !!  சங்க கால ஔவை மூதாட்டி அல்ல எனவும் படித்து உள்ளேன்.  அழகும் இளமையும் அறிவும் வாய்த்த இளம் பெண். மை தீட்டிய விழிகளும், அழகான ஆபரணங்கள் அணிந்த இடையும், பிறை போன்ற நெற்றியும் பெற்றிருந்த மடவரவள். அவர் ஒரு இளம் விறலி. விறலி என்றால் பாடலின் பொருளை உணரும் வகையில் மெய்ப்பாடு தோன்ற ஆடிக் காட்டுபவள் என்று பொருளாம். 

ஒளவையைக் குறித்து பல கதைகளை குழந்தைப் பருவம் முதலே கேட்டும் படித்தும் இருக்கிறோம். அதில் ‘சுட்ட பழம் வேண்டுமா சுடாத பழம் வேண்டுமா பாட்டி’ எனக் கேட்டு முருகன் சோதித்தக் கதையும், அதியமான் ஔவைக்குக் கொடுத்த அதிசய நெல்லிக்கனி கதையும் அடிக்கடி கேள்விப் பட்டிருப்பவை.    சங்ககால ஔவையார்,  தொண்டை நாட்டு மன்னன் அதியமானிடம் நெல்லிக்கனி பெற்றவர். அதியமானுக்கு நல்ல நண்பர். அதியமானைப் போற்றி நிறைய பாடல்களைப் பாடியுள்ளார். ஔவை பல மன்னர்களிடம் சென்று அவர்களை புகழ்ந்து பாடி பரிசில் பெற்றவர். சங்க இலக்கியத்தில் 59 பாடல்களை இவர் பாடியுள்ளார். அக்காலத்தில் வாழ்ந்தவரே கபிலர், கபிலரின் நண்பனான பாரியின் மகள்கள் தான் அங்கவை, சங்கவை. இருவரது திருமணத்திற்கு முயற்சி மேற்கொண்டது ஔவையே.  சிவாஜி படத்தில் தமிழ் பேசும் சாலமன் பாப்பையா இருக்கும் காட்சியில், விவேக் - இவர்களை காட்டிய ஒரு ஸீன்,  காட்சி அமைப்பாலும், வார்த்தைகளாலும் அருவருப்பை தந்தது - மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியது !! 

நத்தத்தனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டது சிறுபாணாற்றுப்படை -  இது 269 அடிகளாலமைந்தது. ஓய்மான் நாட்டு மன்னனான நல்லியக்கோடன் என்பவனைத் தலைவனாகக் கொண்டு எழுதப்பட்ட இந்நூல், அம்மன்னனிடம் பரிசு பெற்ற சிறுபாணன் ஒருவன் தான் வழியிற் கண்ட இன்னொரு பாணனை அவனிடம் வழிப்படுத்துவதாக அமைந்துள்ளது.  

அதியர் குலத்தில் வந்தவர்கள் சிவபக்தி நிரம்பியவர்கள்,  வேள்வி செய்து தேவர்களுடைய அன்பைப் பெற்றவர்கள். சிவபிரானைப் பூசை செய்கையில் அப்பிரானுக்கு அருச்சனை செய்த வில்வத்தைப் பூசை முடிந்த பிறகு தம் தலையில் வைத்துக்கொள்வது ஒரு வழக்கம். இந்தக் குலத்தில் வந்த ஒரு மன்னர் தம் நாட்டில் வேளாண்மையை வளப்படுத்த எண்ணினார். தகடூருக்கு அருகில் வாய்ப்பான பேராறு ஏதும் இல்லை. ஏரிகளும் குளங்களும் இருந்தன. அவற்றால் நெற்பயிர் விளைந்தது. நிலத்துக்கு நெல்லும் கரும்பும் சிறப்பை அளிப்பவை; "நிலத்துக்கணி என்ப நெல்லும் கரும்பும்" என்று ஒரு புலவர் பாடியிருக்கிறார். அக்காலத்தில் நீர்வளம் மிக்க சோழ நாட்டிலும், பாண்டி நாட்டில் சில பகுதிகளிலும் கரும்பைப் பயிர் செய்து வந்தார்கள். தம்முடைய நாட்டிலும் நெல்லைப் போலக் கரும்பையும் கொண்டு வந்து பயிராக்கி நலம் செய்ய வேண்டுமென்று அந்த மன்னர் எண்ணினார். சோழ நாட்டுக்குத் தக்கவர்களை அனுப்பி அங்குள்ள வேளாளர்களை அழைத்து வரச் செய்தார். அவர்களுக்கு வேண்டிய உபசாரங்களைச் செய்து கரும்பைப் பயிர் செய்யும் முறைகளைத் தெரிந்து கொண்டார். சிறந்த கரும்புக் கரணைகளைச் சோழ நாட்டிலிருந்து கொண்டுவரச் செய்து பயிர் செய்தார். அவை நன்றாக வளர்ந்தன.   அந்த வேந்தரை, கரும்பு தந்த காவலர் என்று போற்றிப் புகழ்ந்தார்கள். 

இத்தகைய சிறந்த குலத்திலே பிறந்தான் நெடுமான் அஞ்சி என்பவன், அதிகர் குலத்திலே பிறந்தவனாதலின் அவனுடைய முழுப் பெயர் அதிகமான் நெடுமான் அஞ்சி என்று வழங்கியது . அவ்வளவு நீளமாக வழங்காமல் அஞ்சி என்றும் சொல்வது உண்டு. அதிகமான், அதிகன், அதியன் என்றும் சொல்வார்கள்.   

தகடூர் என்பது இன்று சேலம் மாவட்டத்தில் தருமபுரி என்ற பெயரோடு நிலவுகிறது. அதற்குத் தெற்கே நான்கு மைல் தூரத்தில் இன்றும் அதிகமான் கோட்டை என்ற இடம் இருக்கிறது. இவை யாவும் சேர்ந்த பெரிய பரப்புள்ள இடமே பழங்காலத்தில் அதியமான் இருந்து அரசாட்சி நடத்திய தகடூராக விளங்கியது. எழு பெருவள்ளல்களில் ஒருவனும் ஒளவைக்குச் சாவா மூவா நிலைதரும் நெல்லிக்கனியை வழங்கியவனுமாகிய அதியமான் நெடுமான் அஞ்சியின் வரலாறு சுவையானது. சங்கநூற் பாடல்களைக் கொண்டு அவன் பெருமையை வடித்து வடிவம் கொடுத்து எழுதியதே  தகடூர் யாத்திரைப் பாடல்களும், கொங்குமண்டல சதகப் பாடலும்.     

அதியமான் நெடுமான் அஞ்சி சங்ககால அரசர்களில் ஒருவன். அவனது அன்பைப் பெற்ற சங்ககால ஔவையார் அரசர்களும் புலவர்களும் போற்ற பெருமதிப்புடன் வாழ்ந்தவர். அதியமான் ஔவையாரின் தமிழ்ப்புலமைக்காகவும், எவருக்கும் தலைவணங்காத அவரது இயல்புக்காகவும் அவர் மேல் மதிப்பும் பற்றும் வைத்திருந்தான்.  

அதிகமான் காட்டில் பல மலைகள் இருந்தன. குதிரை மலை என்பது ஒன்று. கஞ்ச மலை என்பது மற்றொன்று. இப்போது சேர்வைராயன் மலை என்று சொல்லும் மலையும் அவன் ஆட்சியில் இருந்தது. கஞ்ச மலையில் பல வகை மருந்து மரங்கள் வளர்ந்திருந்தன. மூலிகைகள் படர்ந்திருந்தன. முனிவர்களும் சித்தர்களும் அந்த மலையை நாடி வருவார்கள். சிறந்த மருத்துவர்கள் அருமையான மருந்துக்குரிய செடி கொடிகளைத் தேடி அந்தமலைக்கு வருவார்கள். வேறு இடங்களில் கிடைக்காத அரிய மருந்துச் செடிகள் அங்கே கிடைத்தன.  அந்த மலையில் மிகவும் அருமையான நெல்லி மரம் ஒன்று இருந்தது. மருத்துவத்தில் வல்ல அறிஞர்கள் அதைக் கண்டுபிடித்தார்கள். அது பல ஆண்டுகளுக்கு ஒரு முறையே காய்க்கும்; பூத்துப் பிஞ்சு விடும்; ஆனால் பிஞ்சுகளெல்லாம் உதிர்ந்துவிடும். அதன் கனியை உண்டால் நரை திரை மூப்பின்றிப் பல காலம் வாழலாம்.   அதிசய  நெல்லிக் கனியை உண்பவர் நீண்டநாள் சுகமாக வாழலாம் என்பதை அறிந்த அதியமான். அக்கனியை ஔவையாருக்குக் கொடுத்தான். 



 அதியமான் நெல்லிக்கனியை ஔவையாருக்குக் கொடுத்ததை சிறுபாணாற்றுப்படையில்

“........................... ....... மால் வரை

கமழ் பூஞ் சாரல் கவினிய நெல்லி

அமிழ்து விளை தீம் கனி ஔவைக்கு ஈந்த

உரவு சினம் கனலும் ஒளி திகழ் நெடுவேல்

அரவக் கடல் தானை அதிகனும் .............”

- (சிறுபாணாற்றுப்படை: 99 - 103)

நல்லூர் நத்தத்தனார் கூறியுள்ளார்.  அதியமான் நெடுமான் அஞ்சி தான் வாழ்வதைவிட ஔவையார் வாழ்ந்தால் தமிழ் வாழும் என நினைத்தான். ஔவையாரும் நெல்லிக்கனி   பற்றிய உண்மைகள் தெரிந்திருந்துமா அதை நீ உண்ணாது எனக்கு  அளித்தாய்? எம்மைப் போன்ற புலவர் பெருமக்கள்மீது உனக்கு இவ்வளவு பெரிய மதிப்பா ! கேட்கவே நெஞ்சம் நெகிழ்கிறது.  உன் அன்பை என்னவென்பது ? நீயும் நீலமணி மிடற்று ஒருவன் போல என்றும் இறவாமல்  நெடுநாள் வாழ்ந்து நீடித்தப் புகழ் பெற்றிட வேண்டும்" என்று  வாழ்த்தினார். 

அன்பு தன்னலம் பாராது என்பதற்கு இதுவே தக்க சான்று! 




Most likely that you have  read the story of King Athiyaman offering the fruit that would provide long life to poetess Avvaiyar .. .. here is a floral depiction of Avvaiyar and Athiyaman found at Kalaivanar Arangam in the flower show organized by Department of Horticulture. 

The flower shop in hot Chennai is open to visitors for 3 days at an entry fee of Rs.50/- for adults + Rs.50 for still cameras.

 
With regards – S. Sampathkumar
4th June 2022.  

1 comment:

  1. மிக்க நன்று. அதியமான், அவ்வயார், அவரின் நூல்கள், ஏனைய அரசர்கள், தகவல்கள் பூ கண் காட்சி படங்கள் எல்லாமே மிகவும் சிறப்பு. நன்றிகள்

    ReplyDelete