Pages

Saturday, October 1, 2022

Navarathiri @ Thirumylai Kapaleechwaram : Kalkiyin Ponniyin Selvan

முக்கிய முன் குறிப்பு :  நவராத்திரி விழா   :   கயிலையே மயிலை .. .. மயிலையே கயிலை என சிறப்பு பெற்ற கபாலீச்வரம் - திருஞானசம்பந்தரின் தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம் இது.:  இந்த சைவ தலத்தில்  சிவபெருமானும் கற்பகவல்லி என பார்வதி தேவியும் வழிபடப்பெறுகின்றனர்.  இந்த திருக்கோவிலில் நவராத்திரி உத்சவத்தில் அம்பாளின் திவ்ய தரிசனமும், சிவபெருமான் பற்றிய சில தேவார குறிப்புகளும்  .. .. கூடவே கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புதினத்தில் வரும் ஒரு கதாபாத்திரத்தை பற்றியும் .. ..  இன்று வெளியாகி இருக்கும் ஒரு படத்திற்கும் இந்த பதிவிற்கும் ஸ்னானப்ராப்தி கூட கிடையாது .. .. யாம் அந்த படத்தை பார்ப்பதாக அபிப்பிராயமும் இல்லை. 




பொன் ஒப்பானைப் பொன்னில் சுடர் போல்வதோர்

மின் ஒப்பானை விண்ணோரும் அறிகிலா

அன் ஒப்பானை அரத்துறை மேவிய

தன் ஒப்பானைக் கண்டீர் நாம் தொழுவதே !!  

சிவபெருமான் பொன் போன்ற மேனியினை உடையவன் என்று தேவாரப் பாடல்களில் சொல்லப்படுகின்றது. மழப்பாடி தலத்தின் மீது சுந்தரர் அருளிய பொன்னார் மேனியனே என்று தொடங்கும் பதிகம் மிகவும் பிரசித்தமானது. கல்கி அவர்களின் பொன்னியின் செல்வன் நாவலில், சேந்தன் அமுதன் பாடுவதாக அமைந்துள்ள இந்த தேவாரப் பாடலில், சுந்தரர் இறைவனின் மேனியின் நிறத்திற்கு பொன்னினை ஒப்பிடுகின்றார். கயிலாயத்தில் வடக்கு பாகம், விடியற்காலையில் சூரியன் ஒளிபட்டு பொன் போன்று மின்னுவதை நாம் காணலாம்.   

பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து

மின்னார் செஞ்சடை மேல் மிளிர் கொன்றை அணிந்தவனே

மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே

அன்னே உன்னையல்லால் இனி யாரை நினைக்கேனே  

கல்கியின் பிரசித்தி பெற்ற  பொன்னியின் செல்வன்  புதினத்தில் -   சேந்தன் அமுதன்  வாணி அம்மையின் மகன் ஆவார். கல்வியிலும், ஒழுக்கத்திலும் சிவபக்தியிலும் சிறந்தவனாக விளங்குவதாகவும், கதாநாயகன் வல்லவரையன் வந்தியத்தேவனின் நண்பனாகவும், பூங்குழலி எனும் படகோட்டி பெண்ணை காதல் செய்பவனாகவும் சேந்தன் அமுதனின் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.   

பொன்னியின் செல்வன், புகழ் பெற்ற வரலாற்று புதினம்.  பல உண்மை கதாபாத்திரங்களையும் சில கற்பனை கதாபாத்திரங்களையும் வைத்து கற்பனையாக உருவாக்கிய தமிழ் புதினமாகும். சுமார் ஐந்தாண்டுகள் இது கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. தமிழ் வாசகர்களின் பேராதரவு பெற்ற இந்நூல்   தனி நூலாகவும் வெளியிடப்பட்டுப் பல பதிப்புக்களைக் கண்டுள்ளது.  சோழப் பேரரசை அடிப்படையாகக் கொண்டு இந்த வரலாற்றுப் புதினம் எழுதப்பட்டிருக்கிறது. பொன்னியின் செல்வன், பல்வேறு நாடகக் குழுக்களால் நாடகமாகவும் அரங்கேற்றப்பட்டுள்ளது.  

கல்கி வெறும் ஒரு நாவலின் ஆசிரியர் மட்டுமல்ல. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்டவர். பாடலாசிரியர். சொந்தமாக பத்திரிகை நடத்தியவர்.  மயிலாடுதுறையிலிருந்து எட்டு மைல் தூரத்தில் இருக்கும் புத்தமங்கலம் என்ற கிராமத்தில் ராமசாமி - தையல்நாயகி தம்பதியின் இரண்டாவது குழந்தையாக 1899ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி பிறந்தார் கிருஷ்ணமூர்த்தி (கல்கி). இவருடைய தந்தை அருகில் உள்ள மணல்மேடு கிராமத்தின் கர்ணமாக விளங்கினார்.  தனது முதல் நாவலான 'விமலா'வை கல்கி சுதந்திர போராட்டத்தில்  சிறைவாசத்தின்போது  எழுதினார். வ.ரா. நடத்திய 'சுதந்திரன்' இதழில் அந்த கதை தொடராக வெளியானது  திரு.வி.க. நவசக்தி இதழை நடத்திக்கொண்டிருந்தார். 1923 அக்டோபரில் நவசக்தியில் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார் கிருஷ்ணமூர்த்தி. 'நவசக்தி'யில் கதைகளை எழுதியபோது, கிருஷ்ணமூர்த்தி என்ற பெயருக்குப் பதிலாக 'அகஸ்தியர்' என்ற புனைப் பெயரில் எழுதிவந்தார்.   1940ஆம் ஆண்டின் இறுதியில் ஆனந்த விகடனில் இருந்து விலகினார் கல்கி. இதற்குப் பிறகு சதாசிவத்துடன் இணைந்து புதிய பத்திரிகையைத் துவங்க முடிவு செய்தார் கல்கி. இதற்கு நடுவில் மீண்டும் ஒரு தடவை சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றார். 

கல்கியின் பொன்னியின் செல்வன்:  இரண்டாம் பாகம் : சுழற்காற்று 22. சிறையில் சேந்தன் அமுதன் - சில வரிகள்  

தஞ்சைக் கோட்டைக்குள் பொற்காசுகள் வார்ப்படம் செய்யும் தங்கசாலை, மற்றொரு சிறிய கோட்டை போல அமைந்திருந்தது. தங்கச்சாலைக்கு வெளிப்புறத்தில் கட்டுக் காவல் தஞ்சைக் கோட்டை வாசலில் உள்ளது போலவே வெகு பலமாயிருந்தது. அன்று மாலை குந்தவை தேவியும் வானதியும் தங்க சாலையைப் பார்வையிடச் சென்றபோது வேலை முடிந்து பொற்கொல்லர்கள் வெளியில் புறப்படும் சமயம். வாசற் காவலர்கள் பொற்கொல்லர்களைப் பரிசோதித்து வெளியில் அனுப்ப ஆயத்தமானார்கள்.  .. .. ..  

மண்டபத்தின் ஒரு மூலைக்கு இதற்குள் அவர்கள் வந்திருந்தார்கள். அங்கிருந்த புலிக்கூண்டு ஒன்றைக் காவலர்கள் அப்பால் நகர்த்தினார்கள். அங்கே தரையில் பதித்திருந்த கதவு ஒன்று காணப்பட்டது. இரண்டு ஆட்கள் குனிந்து கதவை வெளிப்புறமாகத் திறந்தார்கள். உள்ளே சில படிக்கட்டுகள் காணப்பட்டன. அவற்றின் வழியாக ஒவ்வொருவராக இறங்கிச் சென்றார்கள். இருள் அதிகமாயிற்று. இரு சேவகர்கள் பிடித்திருந்த இரண்டு தீவர்த்திகளிலிருந்து புகையினால் மங்கிய வெளிச்சம் வந்து கொண்டிருந்தது. குறுக்கும் நெடுக்குமாகச் சென்ற குறுகிய பாதைகளின் வழியாக அவர்கள் ஒற்றை வரிசையில் போக வேண்டியிருந்தது.  அங்கே புலிகளின் பயங்கர உறுமல் ரோமம் சிலிர்க்கச் செய்தது என்றால், இங்கே நாலுபுறத்திலும் எழுந்த தீனமான, சோகமயமான மனிதக் குரல்கள் உள்ளம் பதறி உடல் நடுங்கச் செய்தன.  

ஆனால் அந்தத் தீனக்குரல்களுக்கு மத்தியில், – விந்தை! விந்தை! – ஓர் இனிய குரல் இசைத்ததும் கேட்டது!  

“பொன்னார் மேனியனே! புலித்தோலை அரைக்கசைத்து

மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை அணிந்தவனே!”  

அந்தப் பாதாளச் சிறையில் இருந்த அறைகள் ஒரு வரிசையாக இல்லை. முன்னும் பின்னும் கோணலும் மாணலுமாக இருந்தன. ஒவ்வொரு அறை வாசலிலும் சென்று காவலன் தீவர்த்தியை உயர்த்திப் பிடித்தான். சில அறைகளில் உள்ளே ஒருவனே இருந்தான். சிலவற்றில் இருவர் இருந்தார்கள். சில அறைகளில் இருந்தவர்களைச் சுவரில் அடித்திருந்த ஆணி வளையத்தில் சேர்த்துச் சங்கிலியால் கட்டியிருந்தது. சில அறைகளில் அவ்விதம் கட்டாமல் சுயேச்சையாக விடப்பட்டிருந்தார்கள். ஒவ்வொரு அறையிலும் இருந்தவர்களின் முகம் தெரிந்ததும் குந்தவைதேவி தலையை அசைக்க எல்லோரும் மேலே சென்றார்கள்.  

நடுவில் ஒரு சமயம் வானதி, “இது என்ன கொடுமை? இவர்களை எதற்காக இப்படி அடைத்திருக்கிறது? நீதி விசாரணை ஒன்றும் கிடையாதா?” என்று கேட்டாள். அதற்குக் குந்தவை, ‘சாதாரண குற்றங்களுக்கு நீதி விசாரணை எல்லாம் உண்டு. ஆனால் இராஜாங்கத்துக்கு எதிராகச் சதி செய்தவர்கள், வெளிநாட்டு ஒற்றர்கள், ஒற்றர்களுக்கு உதவியவர்கள் இவர்களைத்தான் இங்கே போடுவார்கள். அவர்களிடமிருந்து தெரியவேண்டிய உண்மை தெரிந்து விட்டால் வெளியே விட்டுவிடுவார்கள்! ஆனால் சிலரிடமிருந்து உண்மை ஒன்றும் தெரிவதில்லை. ஏதாவது இருந்தால்தானே சொல்லுவார்கள்? அவர்கள் பாடு கஷ்டந்தான்!” என்றாள்.  

Moving away from the novel Ponniyin Selvan written by Kalki Krishnamurthy, here are some photos taken this day at Thirumylai Kapaleechwaram during Navarathiri celebrations.

 
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
30th Sept. 2022. 













1 comment: