குஞ்சியழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
மஞ்சள் அழகும் அழகல்ல - நெஞ்சத்து
நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்
கல்வி அழகே அழகு.
என்ற நாலடியார் பாடல் அறிவீரா !! இங்கே குஞ்சி என்பது குடுமி. தலைமயிரைச் சீர்படுத்தி முடிப்பதால் வரும் அழகும், முந்தானையில் கரையிட்ட அழகும், மஞ்சள் பூசுவதால் உண்டாகும் அழகும் உண்மை அழகல்ல. மனத்தளவில் உண்மையாக நடந்துகொள்கிறோம் என்னும் நடுவு நிலையாம் ஒழுக்க வாழ்க்கையைத் தரும் கல்வி அழகே மிக உயர்ந்த அழகாம் என உரைக்கின்றது இப்பாடல்.
ஒரு அழகான சிறுவன் ... அவன் திரும்பியபோது அவனது அழகிய கண்கவர்ந்த சிகை அலங்காரம், குடுமி - பெற்றோர்களின் ஒப்புதலுடன் எடுத்த புகைப்படம் இங்கே - இடம் : ஸ்ரீசென்ன கேசவப்பெருமாள் திருக்கோவில் (பட்டணம் கோவில்).
கூந்தல் = மகளிர் முடி. குடுமி = ஆடவர் முடி என்கிறது ஒரு சொல் அகராதி. . எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான நற்றிணை என்ற நூலில் மாதர் கூந்தற் பெருமை : 'நன்னெடுங் கூந்தல் நரையொடு மடிப்பினும்' என கூறப்படுகிறது. பொதுவாக, இருபாலார்க்கும் உரிய தலை மயிருள், குதிரைவாற் சாமை போன்றும், கமுகோலை போன்றும். மயில் தோகை போன்றும் அடர்ந்தும் தழைத்தும் நீண்டும் இஇருப்பதால் பெண்கள் தலை மயிரை ஓதி, குழல்,கூந்தல், கூழை, என்றும் கூறினர். கோவலன் தலை மயிரைக் ‘குஞ்சி’ என்றும், கண்ணகியின் தலைமயிரை ‘ வார்குழல் ‘ என்றும் சிலப்பதிகாரம்- மதுரை காண்டம் உரைக்கின்றது.
அகநானூறு, நற்றிணை ஆகிய இரண்டு நூல்களிலும் "போர்' என்னும் ஊருக்கு உரியவனாகப் பழையன் என்னும் வீரன் (குறுநில மன்னன்) ஒருவன் குறிக்கப்படுகிறான். ஓம்படைக் கிளவி (தலைவியைக் கைவிடாது காப்பாயாக என்னும் மொழி)யில் அமைந்த பாலைத் திணைப்பாடல் இங்கே : . தலைவியைத் தலைவனிடத்தே ஒப்படைக்கும் தோழி, "இன்று இளையளாய் உள்ள இவள் கால ஓட்டத்தில் முதுமை எய்தினும் என்றும் பிரியாது இருந்து இவளைப் பேணுவாயாக' என்கிறாள். அப்போது அவள் கூறியதாகவுள்ள வரிகள் :
நன்னெடுங்
கூந்தல் நரையொடு முடிப்பினும்
நீத்தல்
ஓம்புமதி - பூக்கேழ் ஊர!
இன்கடுங்
கள்ளின் இழையணி நெடுந்தேர்க்
கொற்றச்
சோழர் கொங்கர்ப் பணீஇயர்
வெண்கோட்
டியானைப் போல் ஒர் கிழவோன்
பழையன்
வேல்வாய்த் தன்ன நின்
பிழையா நன்மொழி தேறிய இவட்கே!
பழையன் என்னும் பெருவீரனது வேல் தப்பாதவாறு போல - நின்ற சொல்லனாய் என்றும் தப்பாது நிற்கும் நின் சொல்லை நம்பியே இவளை உடன்போக்கில் உன்னோடு அனுப்புகிறேன். பிழைபடாத நினது நல்ல மொழியை உண்மையெனத் தெளிந்தவள் இவள். எனவே, இளமை மாறி முதுமை எய்தினும் இவளைப் பிரியாது காப்பது உன் கடமை' என்கிறாள் தோழி.
19.1.2023
No comments:
Post a Comment