Pages

Thursday, December 5, 2024

the roar of a Tiger !!

 

புலி உறுமுது புலி உறுமுது;  இடி இடிக்கிது இடி இடிக்கிது

கொடிப் பறக்குது கொடிப் பறக்குது’ வேட்டைக்காரன் வரதப்பாத்து

 

ஐய்யனாரு ஆயுதம்போல் கூர் இவன் இருபது நகங்களும் கழுகுடா

அடங்க மறுத்தவன அழிச்சிடுவான்;  அமிலத்தை மொண்டு தெனம் குடிச்சிடுவான்

 

விஜய் நடித்த வேட்டைக்காரன் பாடல் வரிகள் !!

 


 

15 ஆம் நூற்றாண்டில் காளமேகம் வாழ்ந்த தமிழ்ப் புலவர்  சிலேடை பாடல்களைப்  பாடுவதில் வல்லவர்  இவர் பாடிய சிலேடைப் பாடல்களும், நகைச் சுவைப் பாடல்களும் பல உள்ளன. சமயம் சார்ந்த நூல்களையும் இவர் இயற்றியுள்ளார். இவர் ஒரு ஆசு கவி ஆவார். வித்வசிரோமணியாகிய காளமேகப் புலவர் அவ்வவ் அமையங்களில் பாடிய தனிப்பாடல் திரட்டில் இருந்து ஒரு பாடல்

 

நாட்டுக்குளாட்டுக்கு நாலுகாலையா நின்

ஆட்டுக்கிரண்டு காலானாலும் – நாட்டமுள்ள

சீர்மேவு தில்லைச் சிவனேயிவ் வாட்டைவிட்டுப்

போமோ சொல் ஆயப் புலி .

 

            நாட்டுக்குள் உள்ள  எல்லா ஆட்டுக்கும் நான்கு கால்கள். உன் ஆட்டுக்கு (ஆட்டத்துக்கு) இரண்டு கால். நாலுகால் ஆட்டையே பிடிக்கும் புலிக்கு இரண்டுகால் ஆட்டைப் பிடிப்பது எளிதன்றோ ! இந்த ஆட்டைப் பிடிக்காமல் விட்டுவிட்டுப் புலி போய்விடுமா? புலிக்கால் முனிவர் உன் ஆட்டத்தை விட்டுவிட்டுப் போவாரா? என சிவனடிமையாக வாழ்வதை சிறப்பாக உரைக்கும் பாடல்.   

வியாக்ரபாதர் என்ற முனிவர்  சிவபெருமானை நோக்கித் தவமியற்றி, தனக்கு புலிக்கால்கள் வேண்டுமெனக் கேட்டு வரமாகப் பெற்ற ஒரு முனிவர்.  மத்யந்தனர் என்பவரின் மகனுடைய இயற்பெயர் மழன். மழன் தனது தந்தை மத்யந்தனரிடம் வேதங்களைப் பயின்றார்.  அவருடைய ஆழ்ந்த சிவ வழிபாட்டினை கவனித்த முனிவர்கள் அவரை, ‘மழ முனிவர்’ என்று அழைத்தார்கள். மழ முனிவர் பல சிவ தலங்களுக்கும் சென்று வழிபட்டார். தில்லைவனம் என்ற பகுதியை அடைந்த அவருக்கு, அங்கு உயரமாக வளர்ந்திருந்த மரங்களிலிருந்து பூக்களைப் பறித்து ஈசனுக்கு வழிபாடு செய்ய வேண்டும் என்ற எண்ணம் எழ  சிவ வழிபாட்டிற்குச் செலுத்தப்படும் பூக்களானது தேன் குடிக்க வரும் வண்டுகளால் எச்சில்பட்டு அசுத்தமாகிவிடக் கூடாது என்பதற்காக அதிகாலை நேரத்தில் அந்த மரங்களில் ஏறி பூக்களைப் பறிக்கத் தொடங்கினார். மரம் ஏறும் அனுபவம் இல்லாத காரணத்தினால் அவரது கை, கால்களில் கீறல்கள் ஏற்பட்டு காயங்கள் உண்டாயின. அதிலிருந்து வழிந்த இரத்தத் துளிகள் அவர் பறித்த பூக்களிலும் ஒட்டிக் கொண்டன.  அதிகாலை நேரத்திலேயே பூக்களைப் பறித்ததால் பின்னர் இறைவனுக்குச் சூட்டும் போது வாடிப்போவதைக் கண்டு வருந்தினார். என்ன செய்யலாம் என்று யோசித்து கடைசியில் மரங்களில் எளிதில் ஏறுவதற்கு வசதியாக புலியின் கால்களும் இருட்டில் பூக்களைப் பறிக்கும்போது தெளிவாகக் காண்பதற்காக இருட்டிலும் நல்ல கண் பார்வைத் தெரிய வேண்டும் என்று சிவபெருமானிடம் தவமியற்றி வேண்டினார். அவருடைய வேண்டுதலை நிறைவேற்ற எண்ணம் கொண்ட சிவபெருமான், அவருக்கு நேரில் காட்சியளித்து வேண்டிய வரத்தைத் தந்தருளினார்.  

வியாக்ரபாதர் சிவபெருமானின் ஆனந்தத் தாண்டவங்களை தரிசித்தத் தலங்கள், ‘நவபுலியூர்’ என்று அழைக்கப்படுகின்றன. தற்போது சிதம்பரம் என்றழைக்கப்படும் பெரும்பற்றப்புலியூர், கடலூருக்கு அருகில் அமைந்த திருப்பாதிரிப்புலியூர், வெள்ளாற்றின் தென்கரையில் அமைந்துள்ள எருக்கத்தம்புலியூர், ஓமாம்புலியூர், கானாட்டம்புலியூர், சிறுபுலியூர், அத்திப்புலியூர், பெரும்புலியூர், தப்பளாம்புலியூர் ஆகிய ஒன்பது தலங்களும் நவபுலியூர் என்று அழைக்கப்படுகின்றன. திருச்சிக்கு அருகில் அமைந்துள்ள திருப்பட்டூர் என்ற தலத்தில் வியாக்ரபாதரின் ஜீவசமாதியும் பதஞ்சலி முனிவரின் ஜீவசமாதியும் அமைந்துள்ளன.

இனிய காலை வணக்கங்கள் - படத்துடன் சில செய்திகள் தரும் உங்கள் ஆசாமி சிரிப்பு சிந்தனையாளனின் இன்றைய சிந்தனை  !! 

 
With regards – S. Sampathkumar
5.12. 2024  

No comments:

Post a Comment