Search This Blog

Tuesday, March 18, 2025

“சோளம் விதைக்கையிலேயே...!”

மாரியம்மன் கோவிலிலே,  மாறாம கைப்பிடிக்க

நாளும் ஒன்னு பார்த்து வந்தேன், நல்ல நேரம் கேட்டுவந்தேன்;

அம்மன் மனசு இருந்தா அருள் வந்து சேருமடி  !! 

 - என்ற  கவியரசர் கண்ணதாசன் வரிகள் கண்டவுடன்,  இசைஞானி இளையராஜாவின்  குரலும் இசையும் அந்த காட்சியும் ஞாபகம் வந்தால் உங்கள் வயது 50+

 


முதலில் ரொம்ப அழகான மஞ்சள்  மயிலை கேமராவில் காட்டி, கொஞ்சம் பேடு அவுட் பண்ணி, ஒற்றை இரயில் பாதை, பழைய நீராவி இரயில் என்ஜின், மக்கள், இரயில் நகர  - பின்னணி குரலில் - யாரை எதிர்பார்த்து வருத்தத்தோடு காத்து இருக்கிறது இந்த அழகிய மயில் !! என டைட்டில் கார்டுல - சப்பாணி, மயில், பரட்டை (ஆம் கமல், ஸ்ரீதேவி, ரஜினி என அல்ல) என சிகப்பு வார்த்தைகள் நகர - மனதை பிழியும் ராஜா குரலில் - 'சோளம் வெதைக்கையிலே' !! ஒலிப்பது மனதை வருடும்.  

சோளம் -  நம்முடைய பாரம்பரிய உணவு வகைகளில்   முக்கியமான ஒன்று.  எல்லா மண்வகைகளிலும் தட்பவெப்ப நிலைகளிலும் குறிப்பாக வறண்ட பகுதிகளிலும், வளமற்ற நிலங்களிலும் பயிரிட ஏற்றது சோளம்.  சோளம்  புல்வகையைச் சேர்ந்த பல இனங்களை உள்ளடக்கிய தாவரப் பேரினம் (genus) ஆகும். இவற்றுட் சில தானியங்களுக்காகவும் வேறு சில கால்நடைத் தீவனங்களுக்காகவும் பயிரிடப்படுகின்றன. சில வகைகள் மேய்ச்சல் நிலங்களில் இயற்கையாக வளர்கின்றன. இப்பயிர் உலகம் முழுதும் மிதமான வெப்பம் கொண்ட பகுதிகளில் பயிராகின்றன.  இந்தியாவில் அரிசி, கோதுமைக்கு அடுத்தபடியாக சோளம் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. சோளத்தை முழுதாகவோ, உடைத்தோ வேகவைத்து அரிசிபோன்றும், அரைத்து மாவாகவும் உணவுப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. சோளம் நொதித்தல் தொழிற்சாலை, எரிசாராயம், கரைப்பான் தொழிற்சாலைகளில் மாவுச்சத்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. 

டைட்டிலில் பேர்கள் ஓடிக்கொண்டு இருக்கும்போதே -  "மானே என் மல்லிகையே மதுரை மரிக்கொழுந்தே தேனே தினைக்கருதே திருநாளு தேரழகே" என்று சரணம் ஆரம்பிக்க தவில் போன்ற இசைக் கருவிகள் சந்தோஷமாக இணைய, அடுத்த பாரா BGM- புல்லாங்குழல் இசையோடு இரண்டாவது சரணம் "மாரியம்மன் கோயிலிலே மாறாம கைப்பிடிக்க", என்று தமிழகத்தையே புரட்டிப்போட்ட பாடல், படம் '16 வயதினிலே' 

முன்னே ஒரு காலத்திலே சினிமா என்றால் செயற்கை அதிகம்.   வெளிப்புறப் படப்பிடிப்பு என்றால் செலவு அதிகம் எனவே  கிராமக் காட்சி என்றால் அரங்கு அமைத்து அரிதாரம் பூசிய நடிகர்கள் செயற்கையாக இழுத்து இழுத்துப் பேசுவார்கள்.  சில சமயங்களில் நகர நாயகனின் வண்டி கிராமத்துச் சாலையில் நின்றால் நாயகியின் குடத்திலிருந்து தண்ணீர் வாங்கி வண்டிக்கு ஊற்றுவார். அல்லது சூட் கோட்டு அணிந்து வயல்காட்டில் ஓடி டூயட் பாடுவார்.   பதினாறு வயதினிலே முழுக்க கிராம படம் !!!  வயல்கள், நீர்நிலைகள், சாதாரண மக்கள், வட்டார பாஷை, கிராமிய இசை, பயிர்கள் என சிட்டி வாழ்க்கையில் ஊறிய மக்களுக்கு பல புது விஷயங்களை 'ஆத்தா நான் பாஸ் ஆயிட்டேன்' என்ற டயலாக்குடன் காட்டியது. 

பல காலமாகத் திரைப்படங்களில் திரைப்படங்களில்  பாடி வந்த எஸ். ஜானகி  இந்த படத்தில் "செந்தூரப் பூவே" பாடலின் மூலம்   தேசிய விருது பெற்றார். கமல், ஸ்ரீதேவி, ரஜினி, காந்திமதி என்றில்லாமல் சப்பாணி, மயில், பரட்டை, குருவம்மா என்று டைட்டில் போட்டதும்,  காட்சியின் பின்புலத்தில் ஒலிக்கும் பாடல்   

                                 “சோளம் விதைக்கையிலேயே...!”   ராஜா  குரலில்.   

கிராமத்தில் எல்லாவற்றுக்கும் பாடல் பாடுவது   வழக்கம்.   நாற்று நடும்போது, களையெடுக்கும் போது, அறுவடை செய்யும் போது நெல்லைத் தூற்றும் போது என கிராமியப் பாடல்கள் பல உண்டு. அப்படியாக இந்தப்பாடல் அறுவடை சமயத்தில் பாடுவது போல் அப்பட்டமான கிராமியத்தின் எளிய சூழ்நிலையை விவரிக்கிறது. 

பதினாறு வயதினிலே 1977 ஆம் ஆண்டில் வெளி வந்து, தமிழ்த் திரைப்பட வரலாற்றில் புதிய திருப்பம் ஒன்றை உருவாக்கியது, முன்னணி நட்சத்திரங்களான கமல்ஹாசன், ஸ்ரீதேவி, ரஜினிகாந்த் நடிப்பில் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான இத்திரைப்படம் 175 நாட்கள் மேல் வெற்றிகரமாக ஓடியது.  செந்தூரப்பூவே கங்கை அமரனின் முதல் பாடல்.  கிராமிய இசையாளன் இளையராஜா இசைஞானியாகி, சிம்பொனி வெளியிட்டு இன்று உலா இசையின் முடிசூடா மன்னனாக விளங்குகிறார்.   

 


The subject matter of this post is “Corn” – a photo of Corn taken by me – and for posting this, wrote something on the movie and its title song.  Hope you liked it.

 
Regards – S Sampathkumar
18.3.2025 

1 comment:

  1. Good items are in your memory and being explained in a nice way....God Bless for your writing capacity and beautiful memories....Regards...Tgs

    ReplyDelete